புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவராக திமுக பிரமுகரான முத்துப்பட்டினம் மணல் ராமச்சந்திரன் உள்ளார். இந்த ஆண்டுக்கான கம்பன் கழக விழா ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி முடிவடைகிறது.
இதற்கான அழைப்பிதழை கம்பன் கழக நிர்வாகிகள் புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ முத்துராஜா மூலம் வெளியிடச் செய்தனர். அழைப்பிதழ் வெளியான நிலையில் மாவட்டம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. அமெரிக்க முன்னாள் துணை அமைச்சர் ராஜன் நடராஜன் விழாவை தொடங்கி வைக்கிறார். அடுத்தடுத்த நாட்களில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், திருச்சி சிவா எம்.பி, திருநாவுக்கரசர் எம்.பி, திருமாவளவன் எம்.பி, அப்துல்லா எம்.பி, கந்தர்வக்கோட்டை சின்னத்துரை எம்.எல்.ஏ, புதுக்கோட்டை முத்துராஜா எம்.எல்.ஏ, அதிமுக தரப்பில் விராலிமலை எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் உள்பட பலரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரலுடன் 23 ஆம் தேதி நிறைவு நாளில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொள்கிறார் என்று இருந்ததுதான் எதிர்ப்புகளுக்கு காரணமானது.
தமிழ்நாடு அரசே ஆளுநருக்கு எதிராக இருக்கும்போது ஆளுநரை அழைக்கும் விழா அழைப்பிதழை ஆளும் திமுக எம்.எல்.ஏவை வைத்தே வெளியிட்டுள்ளனர். ஆளுநர் வந்தால் கருப்பு கொடி வரவேற்பு கொடுப்போம் என்று திமுக, சிபிஎம், தவாக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஆளுநர் கலந்து கொள்ளும் இந்த விழாவை திமுக அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது போல கோரிக்கையும் வைத்திருந்தனர். நாளுக்கு நாள் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் ஆளுநர் பெயர் நீக்கப்பட்ட அழைப்பிதழை வெளியிட்டுள்ளனர். பலதரப்பினரின் எதிர்ப்புகளால் ஆளுநரை ஒதுக்கிய கம்பன் கழக விழாவில் இனி அனைவரும் கலந்து கொள்ளலாம் என்கின்றனர்.