கடலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் மலையடிகுப்பம், பெத்தான்குப்பம், கொடுக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த கிராமத்தில் 167 ஏக்கர் அரசுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படுகிறது என அரசு சார்பில் ஏற்கனவே அப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு, “இப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லை. முழுக்க விவசாயத்தை நம்பி உள்ளோம்.
இப்படிப்பட்ட சூழலில் விவசாய நிலத்தை எக்காரணத்தைக் கொண்டும் கையகப்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்தனர். அப்பகுதி மக்களுக்கு அரசு சார்பில் ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, “அரசு ஏன் எந்த உரியக் காரணமும் தெரிவிக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை அளவீடு செய்ய அதிகாரிகள் இன்று (29.01.2025) வந்திருந்தனர். அவர்களைக் கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும் நிலங்களைக் கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த இடங்கள் தங்களுடைய மூதாதையர் நிலம் எனத் தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு விவசாயிகளால் பயிரிடப்பட்டிருந்த முந்திரி மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இது தொடர்பாகக் கோட்டாட்சியர், விவசாயிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்காகத் தான் இந்த நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகத் தெரிவித்தார். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.