Skip to main content

காரில் அதிமுக கொடி நீக்கம்; ஓபிஎஸ் ஆலோசனை

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

NN

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது.

 

இதனால் அதிமுகவின் கொடிகள், சின்னங்களை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறை தான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிவையற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

 

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் ஆர். மகாதேவன் முகமது ஷஃபிக் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இது குறித்து அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ள அதே நேரத்தில் அவருடைய காரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிமுக கொடி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்