கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, தென்மாவட்டத்தில் பெய்த மழையைத் துல்லியமாகக் கணிக்க வானிலை ஆய்வு மையம் தவறிவிட்டதாகத் தமிழக அரசு விமர்சித்து இருந்தது. அதேபோல், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், “சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நிலை இப்போதும் உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். சென்னை வானிலை ஆய்வு மையம் தேவையில்லை அது வேஸ்ட்” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தை விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், விமர்சனங்களைத் தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘வானிலை ஆய்வு மையத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் உலகத் தரத்திற்கு ஒப்பானவை. அதிவேக கணினிகள் இஸ்ரோவின் செயற்கைக் கோள் வசதிகள் ரேடார்கள் உள்ளன. தானியங்கி வானிலை சேகரிப்பான்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் உலகத் தரத்திற்கு ஒப்பானவை.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் உலகத் தரம் வாய்ந்தது என உலக வானிலை அமைப்பு பாராட்டியுள்ளது. சென்னை வானிலையை கண்காணிக்க 2 டாப்ளர் ரேடார்கள் பயனில் உள்ளன. தென் தமிழகத்தைக் கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன. வர்தா, கஜா, மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மைய எச்சரிக்கைகள் காரணமாகப் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், வானிலை மைய பணியாளர்களைப் புண்படுத்தும் விதமாக உள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் நவீன மயமானதாக இல்லை என்ற விமர்சனங்கள் தவறானவை’ என்று குறிப்பிட்டுள்ளது.