கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எலவாசனூர்கோட்டை. இந்த ஊரில் வசித்து வருபவர் 50 வயது விக்டர் தாமஸ். மாற்றுத்திறனாளியான இவருக்கு தெரசா என்ற மனைவியும் மெர்லின் என்ற பட்டதாரி மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் உட்படப் பல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், “உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சில ஆண்டுகளாகக் கணினி பிரிவில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த வேலையிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தன்னை நீக்கி வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதனால் வேலைவாய்ப்பு இன்றி குடும்பத்தில் வறுமை ஏற்பட்டு பட்டினி கிடக்கிறோம். பட்டம் படித்திருந்தும் அதற்கான வேலை கிடைக்கவில்லை கிடைத்த தற்காலிக வேலையையும் பிடுங்கிக் கொண்டார்கள்.
எனவே என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குக் கணினி சம்பந்தமாக உரியவேலை வழங்கி உதவி செய்யுமாறு” அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரது மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு வேலை கிடைப்பதற்கு உதவி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். அதனால் தனது மனைவி, மகளுடன் நேற்று கோவை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விக்டர் தாமஸ் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். சம்பவம் கேள்விப்பட்டு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விக்டர் தாமசிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து உதவி செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் விக்டர் தாமஸ் தனது மனைவி மகளுடன் புறப்பட்டுச் சென்றார்.
ஒரு மாற்றுத்திறனாளி தற்காலிகமாகப் பணி செய்ததையும் பிடுங்கிக்கொண்டு துரத்திவிட்ட உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு மனசாட்சியே இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதுபோன்ற மாற்றுத்திறனாளி குடும்பங்கள் வாழ்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து அந்த குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.