தமிழகத்தில் மொத்தம் 50 மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகங்களும், 50 துணை பத்திரப் பதிவு அலுவலகங்களும், 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், நில பத்திரப் பதிவு, திருமண பதிவு, நிறுவனங்கள் பதிவு, தொண்டு நிறுவனங்கள் பதிவு என பல லட்சங்கள் புரளும் பதிவாளர் அலுவலகங்கள்.
மற்றொரு புறம் வாகன பதிவிற்கு வரும் தனியார் வாகனங்கள், அரசு வாகனங்கள் என எப்போதும் பயங்கர பிசியாக இருக்கும் இந்த அலுவலகங்களில் லஞ்சத்திற்கு பஞ்சம் இல்லாமல் மேல்நிலை அதிகாரிகளில் துவங்கி கடைநிலை ஊழியர்கள்வரை தினமும் ஒரு தொகையோடுதான் வீட்டிற்கு செல்கிறார்கள். இதனை தடுக்க லஞ்ச ஒழிப்பு துறையினரும் அடிக்கடி ரெய்டு நடத்தி சிலரை கைது செய்தும் பணியில் இருந்து நீக்கியும் உள்ளனர்.
கடந்த சில தினங்களாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தமிழகம் முழுதும் உள்ள இந்த அலுவலகங்களில் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் பயந்துபோன அதிகாரிகளில் சிலர் மருத்துவ விடுமுறையில் வீட்டிற்குள் முடங்கியதாக அந்த அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் வாகனப்பதிவு அலுவலங்களில் பதிவுக்கும், தரசான்றிதழ் பெற வரும் தனியார் வாகனங்களை அலுவலகத்திற்கு வரவழைக்காமல் வெளியே தனியாக வரவழைத்து டீலை முடித்து விடுகின்றனராம். அரசு வாகனங்கள் வந்தால் 2 & 3 நாட்கள் காக்க வைத்து அதன் பிறகே அதற்கான சான்றிதழ்களை கொடுக்கின்றார்களாம். எப்படியோ தீபாவளி கலெக்ஷனில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மண்ணை அள்ளி தூவிய கடுப்பில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.