Skip to main content

களிமண் உருவத்தை வைத்து பூஜை! சிறைத்துறை அதிகாரியை பழிவாங்க மாந்திரீகம் செய்த வார்டன்! 

Published on 20/01/2019 | Edited on 20/01/2019
u


ஊத்தங்கரை கிளைச்சிறையில் பணி நேரத்தை மாற்றியதால் ஆத்திரம் அடைந்த வார்டன், சிறைத்துறை அதிகாரியை பழி வாங்கும் நோக்கில் களிமண் உருவத்தை வைத்து மாந்திரீக பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சேலம் மத்திய சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு 12 பேர் சிறை வார்டன்களாக பணியாற்றி வருகின்றனர். 20 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.


தற்போது சிறைகளில் வார்டன்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் சுழற்சி முறையில் மூன்று மணி நேர ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த இரு நாள்களுக்கு முன்பிருந்து இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு வார்டன்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பி உள்ளது.


ஜனவரி 18ம் தேதியன்று அந்தக் கிளைச்சிறையின் கண்காணிப்பாளர் விஸ்வநாதன், பணி நேர மாறுதலை அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தார். இதனால் சிறைக் கண்காணிப்பாளருக்கும் வார்டன் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வார்டன், கண்காணிப்பாளருக்கு கடுமையாக சாபம் விடத் தொடங்கினார். 'பணியாளர்களை வதைப்பதில் உங்களுக்கு என்ன அப்படியொரு ஆனந்தம்? நீங்கள் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். நீங்கள் நாசமாகப் போய்விடுவீர்கள்,' என்று சாபம் விட்டவர், அங்கிருந்து கோபமாக வெளியே சென்றார்.


பின்னர், சிறிது நேரத்தில் அந்த வார்டன், தேங்காய், வாழைப்பழம், பூ, எலுமிச்சை, களிமண்ணால் ஆன உருவம் ஆகியவற்றுடன் சிறைக்குள் வந்தார். சிறை வளாகத்தில் திடீரென்று அந்த களிமண் உருவத்தை வைத்து மாந்திரீகம் செய்வதுபோல் சில பூஜைகளை செய்தார். எனக்கு வேலை நேரத்தை மாற்றிக் கொடுத்தவர்களை கடவுள் தண்டிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அங்கிருந்த காய்ந்த மரக்குச்சிகளை எடுத்து வந்து தீ மூட்டினார். அதில் சில துணிகளைப் போட்டு எரித்தார். 


இதனால் சிறைக்குள் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மற்ற வார்டன்களும், கைதிகளும் அந்த வார்டனை சமாதானப்படுத்தினர். ஆனால் யார் பேச்சையும் அவர் கேட்கவில்லை. 


இந்நிலையில், வெளியே சென்றிருந்த சிறைக்கண்காணிப்பாளர் விஸ்வநாதனும் உள்ளே வந்தார். அங்கு நடந்த சம்பவங்களைப் பார்த்த அவர், அந்த வார்டனை கண்டித்தார். அப்போதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற வார்டன்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.


இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்களை கிளைச்சிறையில் நடந்த சம்பவம் குறித்து சேலம் மத்திய சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்