![Recommendation to take action against the authorities as building has been constructed in substandard manner](http://image.nakkheeran.in/cdn/farfuture/BBTQfs5mHdMWPPHHbmaSA6hZFqg3uvRMFY_ZAiM0sGg/1709797462/sites/default/files/inline-images/th-6_385.jpg)
சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.
![Recommendation to take action against the authorities as building has been constructed in substandard manner](http://image.nakkheeran.in/cdn/farfuture/XGx2eAMtsWXIeqhCQMT_omKSrPk3M9Tw4OXIobP8kq0/1709797481/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_200.jpg)
மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.
மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.