Skip to main content

“போக்சோவில் இரண்டுமுறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் குறித்து பரிந்துரை..” - கோவை சரக டி.ஐ.ஜி

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

"Recommendation on the Goondas law against those arrested twice in Pocso .." - Coimbatore  DIG

 

ஈரோட்டில் நடந்த ‘காக்கும் கரங்கள்’ நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி, பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கும் வகையில் காவல்துறையின் செயல்பாடு இருந்துவருகிறது. 

 

குறிப்பாக, ஈரோடு மாவட்ட எஸ்.பி. சசிமோகன் தலைமையில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், காக்கும் கரங்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் குழந்தைகள் நலம் சார்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

 

கிட்டத்தட்ட 10 துறைகளைச் சேர்ந்தவர்கள், கிராம பஞ்சாயத்தில் சிறந்தவர்கள், தன்னார்வலர்கள் போன்றோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 34 குழுக்களாக இது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், கடந்த மாதத்தைவிட இந்த மாதம் குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் இதுகுறித்து இன்று (24.07.2021) ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

ஈரோடு மாவட்டத்தில் இந்த 34 குழுக்கள் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன. கிட்டத்தட்ட இந்தக் குழு தொடங்கி ஒரு மாதத்திற்குள்ளாகவே 450 கூட்டங்களை நடத்தியதில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் கிட்டத்தட்ட 15 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது தயங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகார் கொடுக்க முன்வருகிறார்கள். 

 

அதேபோன்று கடந்த ஜூன் மாதம் 9 போக்சோ வழக்குகள் பதிவாகியிருந்தது. ஆனால், ஜூலை மாதம் 6 ஆக குறைந்துள்ளது. போக்சோ வழக்கில் இரண்டுமுறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறினார். பேட்டியின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்