திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. நகரங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாக டெங்கு காய்ச்சல் நோயாளிகள் மருத்துவனைகளுக்கு செல்கின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் தானிப்பாடி அருகே ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் இறந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பஞ்சாயத்து செயலாளர்களுக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதாரதுறை சார்பில் ஒரு கூட்டம் நவம்பர் 5ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, "கிராமப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை சரிச்செய்ய வேண்டும், மழை நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருக்களில் கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு பிளீச்சிங் பவுடர் போட வேண்டும்" என்றார்.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய ஊராக வளர்ச்சித்துறையினர் நேர்மையான அதிகாரி ஒருவர், "உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம். எப்படியெனில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுயிருந்தால் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், நகர மன்ற, பேரூராட்சி கவுன்சிலர்கள், சேர்மன்கள் என இருப்பார்கள்.
இவர்கள் மக்களால் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டவர்கள், இவர்களில் பலருக்கு வாக்களித்த மக்கள் மீது அக்கறையில்லை என்றாலும், மீண்டும் வாக்கு கேட்டு அவர்களிடம் தான் செல்ல வேண்டும் என்கிற பயம் உள்ளது. அதோடு, அவர்கள் மக்களோடு மக்களாக தான் குடியிருக்கிறார்கள். அதனால் மக்களுக்கு ஒரு நோய் வந்தால் தங்களுக்கும் வரும் என்கிற பயமிருக்கும். இதனால் தங்கள் பகுதியை, வார்டை, கிராமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மழை காலங்களில் நோய் பரவாமல் தடுக்க ஊராட்சி சார்பில் என்ன செய்ய முடியும்மோ அதை செய்து நோய் பரவாமல் தடுப்பார்கள்.
கடந்த காலங்களில் அப்படித்தான் சொந்த பணத்தை செலவு செய்தாவது பணிகள் செய்தார்கள். கடந்த 3 வருங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் அந்த பதவிகளில் யாருமில்லை. இருக்கும் ஊராட்சி எழுத்தர் மட்டும் என்ன செய்துவிட முடியும். அவர்களால் முடிந்த அளவுக்கு தான் சுகாதார பணியில் இறங்குகிறார்கள். இவர்கள் மக்களோடு மக்களாக இருந்தாலும், தாங்கள் அரசு ஊழியர் என்கிற எண்ணம் மனதுக்குள் வந்துவிட்டது.
இந்த எண்ணம் இருப்பவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் மட்டுமே மக்களுக்கான பணிகளை செய்வார்கள், மற்றவர்கள் யார், எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன என்கிற மனப்பான்மை தான். இந்த காரணத்தால் தான் கடந்த காலங்களை விட கடந்த 4 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது" என்றார்.