கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் உள்ள மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் கேந்திரய வித்யாலயா பள்ளியின் முதல்வராக இருந்தவர் குமார்தாகூர். இவர் அப்பள்ளியில் பயின்ற மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறை, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமார்தாகூரை கைது செய்தது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவரை, தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை நகரத்தில் உள்ள கேந்திரவித்யாலயா பள்ளி முதல்வராக பணி வழங்கியது தென்னிந்திய மத்திய பள்ளிக்கல்வித்துறை.
திருவண்ணாமலையை அடுத்து கணந்தம்பூண்டி என்கிற கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்த தகவல் தாமதமாகத்தான் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. எங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவரை பணியாற்றுவதை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம் என பெற்றோர் சங்க தரப்பில் இருந்து செப்டம்பர் 10ந்தேதி எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.
கேந்திர வித்யாலயா பள்ளிக்கு சேர்மன், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தான். இந்த பிரச்சனை எழுந்ததும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, முதல்வராக பணியாற்றும் சுரேஷ்தாக்கூரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி இன்று செப்டம்பர் 11ந்தேதி சம்மந்தப்பட்ட முதல்வர் பள்ளிக்கு வரவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இந்தியா முழுவதும் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகள் மத்தியரசு ஊழியர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக தொடங்கப்பட்டது. தற்போது மத்தியரசு ஊழியர்களின் பிள்ளைகளோடு மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசு ஊழியரல்லாத சில பெற்றோர்களின் பிள்ளைகளும் படிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
வேளாண் மாணவி ஒருவர் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்து அதற்கு ஆதாரங்களை தந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ள அதே திருவண்ணாமலையில் தான் கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் மீதான பிரச்சனைக்கு இத்தனை வேகமாக கலெக்டர் நடவடிக்கை எடுத்ததற்கு காரணம், அங்கு படிப்பது அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என்பதால் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.