தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அதன் தலைவர் விக்கிரமராஜா ஈரோடு வந்திருந்தார். கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், சத்தியமங்கலம் மற்றும் ஈரோட்டில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வருகிற 8ஆம் தேதி சென்னையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சீனப்பட்டாசுகள் வரவை தடுக்க ஆலோசனை கூட்டம் வைத்துள்ளோம். சீன பட்டாசுகளின் வரவை அரசு தடுக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் என மக்கள் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தும் பொருட்களை மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்கள் பட்டியிலிருந்து நீக்கி உள்ளார்கள்.
இதனால் இந்தப் பொருட்களின் விலை உயரக்கூடிய அதிக வாய்ப்பு உண்டு. தேவைப்பட்டால் இந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன் நாங்கள் வியாபாரிகளும் இணைந்து போராடுவோம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதியாக போராட்டத்தில் இறங்கும். அதுமட்டுமில்லாமல் பல ஆயிரக்கணக்கான வணிகர்களை திரட்டி டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டமும் மாநாடும் நடத்த உள்ளோம்.
மேலும் இப்போது பண்டிகை காலம். தீபாவளி விரைவில் வர உள்ளது இந்த பண்டிகையையொட்டி மக்கள் புத்தாடைகள் வாங்க, பொருள்கள் வாங்க கடைகளுக்கு வருவது வழக்கம் இதில் கரோனா ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் திடீர் ரெய்டு செய்து அங்கு அபதாரம் விதிப்பது என்பதை தமிழக அரசு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." என்றார்.