வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் பொது மக்கள் தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை வாங்கத் தமிழகம் முழுவதும் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் தமிழக அரசும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்து வருகின்றனர். அதனடிப்படையில் வடசென்னை, அண்ணாநகரில் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் இருக்கும் அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் ஆகிய பொருட்களின் தரங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அதிரடியாக ஆய்வு செய்து வருகிறார்.
இது சம்பந்தமாக உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணியிடம் கேட்ட போது, “தீபாவளி பண்டிகை நவம்பர் மாத தொடக்கத்திலேயே வருவதால் ரேஷன் பொருட்களும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வரும் உத்தரவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தான் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வருகிற(1.11.21)ம் தேதி முதல்(3.11.21)ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்.
அதன் மூலம் பொதுமக்கள் தீபாவளிக்காக ரேஷன் பொருட்களான அரிசி, சீனி, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இப்படி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு எடையைக் குறை இல்லாமல் போடுவதுடன் மட்டுமல்லாமல் அவர்களிடம் கடை ஊழியர்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதில் ஏதும் புகார்கள் வந்தால் கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் பொதுமக்களும் முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு ரேஷன் பொருட்களை வாங்கி சென்று தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுகிறேன்” என்று கூறினார்.