
விழுப்புரம் மாவட்டம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரஹ்மான் சேட் என்பவரின் மகன் ஷாகுல் அமீது(35) மற்றும் விராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முபாரக் அலி என்பவரின் மகன் ஜாபர் சேட்(28) ஆகிய இருவரும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த (03.06.2021) அன்று வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஞானோதயம் சோதனைச் சாவடியில் 24 டன் ரேஷன் அரிசியுடன் பிடிபட்டனர். மேலும், அரிசி கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட TN23 CD1697 என்ற டாடா கண்டைனர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை விழுப்புரம் அலகில் குற்ற எண் 94/21ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான திடீர்குப்பம் முத்தோப்பை சேர்ந்த ஷாகுல் அமீது(35), விநாயகர் நகரைச் சேர்ந்த ஜாபர் சேட்(28) ஆகியோர் ஜூன் மாதம் 8ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஆபாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் கே.ஸ்டாலின் அறிவுரையின்படி இவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஜான்சுந்தர் என்பவரின் நேரடி பார்வையில் கடலூர் அலகு காவல் ஆய்வாளர் கல்பனா என்பவர் மூலமாக மேற்படி இக்குற்றச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆட்சியரின் பரிந்துரைப்படி சிறையில் வைக்கப்பட்டனர். மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் பேரில் மேற்படி ரேஷன் அரிசி கடத்தல்காரர்களான இருவரையும் தடுப்பு காவலில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மேற்படி நபர்களை கள்ளச்சந்தைக்காரர் தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.