கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், குட்டூர் காலனியைச் சேர்ந்த முனியன் மகன் சுப்பிரமணி வீட்டின் முன் வாசலில் இருந்த டாடா சுமோ காரை, கிருஷ்ணகிரி தனி வட்டாட்சியர் எம்.இளங்கோ சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளார்.
அப்போது அந்த காரில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் இருந்துள்ளார். அவரை விசாரித்தபோது, காரில் தலா 50 கிலோ எடை கொண்ட 29 மூட்டைகள் ரேசன் அரிசி இருப்பதாக தெரிவித்துள்ளார். காரில் உள்ளே பார்த்தபோது, அவை பொது விநியோக திட்ட பச்சரிசி மொத்தம் 1400 கிலோ கோழித்தீவனப் பைகளில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளார் எம்.இளங்கோ.
இதனையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் பிரதீப் வி பிலிப் உத்தரவுபடி, சென்னை மண்டல காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார் அறிவுரையின்பேரில் கோவை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் நேரடி மேற்பார்வையில் கிருஷ்ணகிரி ஆய்வாளர், டிரைவர் பிரபுவை கைது செய்தனர்.
பிரபுவிடம் நடத்திய விசாரணையில், பச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அச்சுதன், பிரபு ஆகியோர்கள் சொன்னதன் பேரில்தான் கிருஷ்ணகிரி குட்டூர் காலனியில் வசிக்கும் சுப்ரமணி என்பவரது ஊரில் உள்ள ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அச்சுதன், சபரிநாதன், வெங்கடேசன், அனுமுத்து மற்றும் கவியரசு ஆகியோர் மூலமாக அச்சுதனனுக்கு சொந்தமான டாடா சுமோவில் ஏற்றப்பட்டுள்ளது. அந்த காரை சாமுடி என்பவர் ஓட்ட அச்சுதன், அச்சுதன் அண்ணன் மகன் ராகுல் என்கிற பிரபாகரன் ஆகியோருடன் குட்டூர் காலனிக்கு சென்று அங்கு சுப்ரமணி வீட்டிற்கு முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும், அச்சுதன் மற்றும் பிரபு ஆகியோர் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிட்டா என்பவர் மூலமாக அதிக விலைக்கு விற்று வருவதும் தெரிய வந்தது. அச்சுதன் கடந்த 29.08.2019 அன்று வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள சுப்ரமணி, பிரபு, வெங்கடேசன், சபரிநாதன், கவியரச, அனுமுத்து, ரவி ஆகியோர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் கோவை பொள்ளாச்சி மீனாட்சிபுரம் மெயின்ரோட்டில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏற்கனவே அரிசி கடத்தலில் தொடர்புடைய ஆனைமலையை சேர்ந்த மொய்தீன் குட்டி என்பவரது மகன் இப்ராகிம் என்பவர் பிடிபட்டார். அவர் வந்த இருசக்கர வாகனத்தில் 150 கிலோ ரேசன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தீபக், தௌபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.