திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சைவ ஓட்டலில் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த நபர், தனது உறவினர் இறப்பில் பங்கேற்ற உறவினர்களுக்கு 35 சைவ சாப்பாடுகள் ஆர்டர் கொடுத்துள்ளார். அதன்படி அவரின் வீட்டிற்குச் சாப்பாடு அனுப்பப்பட்டது.
வீட்டில் உறவினர்கள் சாப்பிடும் பொழுது பீட்ரூட்டில் எலியின் தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எலியின் தலையைப் பார்ப்பதற்கு முன்பு சாப்பிட்டவர்கள் சிலர் வாந்தியும் எடுத்துள்ளனர். உடனே, வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டலுக்குச் சென்று நீங்கள் கொடுத்த உணவில் எலியின் தலை இருந்ததாக முறையிட்ட பொழுது அதனை ஓட்டல் ஊழியர்கள் ஏற்கவில்லை. 6 மணிநேரத்திற்கு முன் கொடுத்தனுப்பிய உணவிற்கு இப்பொழுது வந்து உணவில் எலித்தலை இருக்கிறது என்று சொல்வது முறையல்ல என்று கூற, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து எலியின் தலை இருந்த சாப்பாட்டை பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் வைரலாக பரவிய நிலையில் இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக அந்த கடையில் சோதனை செய்தனர். அப்பொழுது ஹோட்டலில் இருந்த தேநீர் ஸ்டாலில் இருந்து எலி ஒன்று ஓடியதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இனி ஹோட்டலில் எலி நடமாட்டம் இருந்தால் கடும் எச்சரிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எலி தலை இருந்ததாகக் கூறப்படும் உணவின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவு வந்தபிறகு அந்த முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.