வேலூர் மாவட்ட மாநகர வடக்கு காவல்துறை ஆய்வாளர் நாகராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவரை அதிரடியாக ஆலங்காயம் காவல்நிலையத்துக்கு மாற்றி உத்தரவிட்டார் வேலூர் சாரக டி.ஐ.ஜி காமினி.
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ள ராமச்சந்திரன், சோளிங்கர் காவல்நிலைய எழுத்தர் பாலாஜி இருவரும், ஊரடங்கின் போது அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே வந்த வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமாகப் பேசியது, வாகனங்களை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுப்பற்றிய விசாரணையில் அவை உண்மை எனத் தெரியவந்தது.
விசாரணை அறிக்கையைப் பெற்ற ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம், அவர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். ஊரடங்கு நேரத்திலும் அதிகாரத் தொனியோடு நடந்துக்கொள்வதுடன், மக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் காவலர்கள், கீழ்நிலை அதிகாரிகள் தண்டிக்கப்படுவது மற்ற காவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.