மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்கிற திட்டப்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்துகிறது. திமுக. எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதிகளிலும், எம்.எல்.ஏக்களாக இல்லாத தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் தமிழகத்தில் உள்ள 12528 ஊராட்சிகளில் இந்த கூட்டத்தை நடத்துகின்றனர். பொங்கலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்வு பொங்கல் முடிந்ததை தொடர்ந்து மீண்டும் தொடங்கியுள்ளது.
திமுகவின் வேலூர் கிழக்கு மா.செவும், இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவுமான காந்தி, கடந்த 9ந்தேதி தனது தொகுதியில் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கினார். வாலாஜா ஒன்றியம் படியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி கூட்டம் நடைபெற்றபோது, அந்த கூட்டத்தில் மாற்று திறனாளியான மீனா, எனக்கு கால் ஊனம், 3 சக்கர வண்டிக்கேட்டு அரசாங்கத்திடம் பலமுறை மனு தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நீங்களாவது அதிகாரிகளிடம் கூறி எனக்கு ஒரு மூன்று சக்கர வண்டி வாங்கி தாங்கள் எனக்கேட்டார். அந்த மனுவை வாங்கி தனது உதவியாளரிடம் தந்து உடனே ஏற்பாடு செய் என உத்தரவிட்டார்.
அன்று மாலையே மீண்டும் அந்த கிராமத்திற்கு வந்தார் காந்தி எம்.எல்.ஏ. மாற்று திறனாளி மீனா வீடு எங்க இருக்கு எனக்கேட்டார். மக்கள் அவரை அழைத்து வந்தனர். அவருக்கு புதியதாக மூன்று சக்கர சைக்கிளை தந்ததும் அந்த பெண்மணி, கண்ணீரில் நீரோடு நன்றி சொன்னார். இதைப்பார்த்து அக்கிராம மக்கள் ஆராவாரம் செய்தனர்.
இதைப்போல், செங்காடுமோட்டூர் என்கிற கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சிசபா கூட்டத்திற்கு சென்றார். அந்த கிராமத்தின், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் எம்.எல்.ஏ காந்தியிடம் வந்து, நாங்க அம்மூர் இந்தியன் வங்கியில் கடன் வாங்கினோம். அதை கட்டிக்கிட்டு இருக்கும்போது ஒருத்தர் இறந்துட்டாங்க. அவுங்க கடனை தள்ளுபடி செய்யாம அதை மீதியிருக்கின்ற எங்க 9 பேர்க்கிட்ட கேட்டாங்க. நாங்க கட்டல, அதனால எங்களோட 100 நாள் வேலைக்கான தினக்கூலிய பேங்க் அக்கவுண்ட்ல போடறாங்க. அதை பேங்க்காரங்களே கடனுக்குன்னு எடுத்துக்கறாங்க என கண்ணீரோடு கோரிக்கை வைத்தனர். அந்த பாக்கி 28 ஆயிரம் ரூபாயை நானே கட்டுறேன். நீங்க கவலைப்படாதிங்கம்மா எனச்சொல்லி கடனை கட்டியுள்ளார்.
இவரைப்போல் தமிழகத்தில் உள்ள மற்ற எம்.எல்.ஏக்களும், கட்சி நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என்கின்றனர்.