2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், "சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் 17,218 ஆக இருந்த உயிரிழப்புகள், 2020-ஆம் ஆண்டில் 8,060 ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. நீதியை விரைவாகவும், முனைப்பாகவும் வழங்குவது ஒரு திறம்பட நிர்வகிக்கப்படும் நவீன நாட்டின் முக்கிய அம்சமாகும். 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் இந்திய நீதி அறிக்கைகளில் நீதித்துறை என்ற பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவீதம் இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பு, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல், தகவல்தொடர்பு அமைப்புகள், மீன் பதப்படுத்தும் வசதிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாயிரம் இழுவலை மீன்பிடி படகுகளை மாற்றுவதற்கான சிறப்புத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 42 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளன. மீனவர்களின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 2020 - 2021 ஆம் ஆண்டில் 301.31 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறைக்கான மூலதன செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் ரூபாய் 580.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 43 புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூபாய் 1,374 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் தேசிய நீர் விருதுகளில் தமிழகம் முதலிடத்தை வென்றுள்ளது.
கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும். அத்திக்கடவு - அவிநாசி வெள்ளக்கால்வாய் திட்டம் இந்த ஆண்டு டிசம்பரில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வள ஆதார திட்டங்களுக்காக 2021 - 2022 இல் ரூபாய் 6,453.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் வலையமைப்புத் திட்டத்திற்காக ரூபாய் 287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-க்குள் முடிக்கப்படும். விவசாயிகளின் பயிர்க்காப்பீடு திட்டத்துக்காக ரூபாய் 1,738.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 - 2022 இல் வேளாண்துறைக்கு ரூபாய் 11,982.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருட்பெருஞ்ஜோதி வள்ளலார், காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஹார்வர்டு, ஹுஸ்டனைத் தொடர்ந்து, டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கும் தமிழ் இருக்கை அமைய நிதியுதவி அளிக்கப்படும்.
பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (ஊரகம்) ரூபாய் 3,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (நகர்ப்புறம்) ரூபாய் 3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 - 2022 இல் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு ரூபாய் 2,350 கோடி, அம்ருத் திட்டத்திற்கு ரூபாய் 1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டு திட்டத்திற்கு ரூபாய் 871.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 - 2022 கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கும். 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நடப்பு கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அறிவித்துள்ளனர்.