நான்கு கிலோமீட்டர் கடற்கரையோர தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கிய நிலையில், அதனைக் கைப்பற்றிய மரைன் போலீசார் கடத்தலில் ஈடுபட்டது யார்..? என விசாரணையில் ஈடுபட்டு வருவது தீவுப்பகுதியில் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பீடி இலைகள், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடங்கி தங்கம் வரை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றது. அதாவது இங்கிருந்து பீடி இலைகள், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட, அதற்குப் பதிலாக அங்கிருந்து தங்கம் கொண்டு வருவது ஆண்டு கணக்கில் நடைபெற்று வருகின்றது. இதற்கு அவ்வப்போது மீட்கப்படும் கடத்தல் பொருட்களே சாட்சி.!! மரைன் போலீஸ், சுங்க இலாகாவினர், உள்ளூர் போலீசார் என பலரும் இருந்து கடத்தல் தொடர்வது தான் வேடிக்கையே..!
இந்நிலையில், தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் அரிச்சல்முனையில் இருந்து தனுஷ்கோடி பாலம் வரை நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு தலா 50 கிலோ எடையில் கடப்பட்ட 9 பீடி இலைகள் பண்டல்கள் கரை ஒதுங்கின. இது மீனவர்கள் மூலம் மரைன் போலீசாருக்கு தகவலாக கிடைக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரைன் போலீசார் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கி கிடந்த பீடி இலைகளை பறிமுதல் செய்து தனுஷ்கோடி மரைன் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து இலங்கைக்கு கடத்தி கொண்டு சென்ற பீடி இலைகள் எங்கிருந்து கடத்திச் செல்லப்பட்டது என்றும் கடத்திச் சென்ற நபர்கள் குறித்தும் மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.