மது போதைக்கு அடிமையாகிவிட்ட இளைஞர் ஒருவர், மது கிடைக்காத நிலையில், போதைக்காக மாத்திரைகளையும், மருந்துகளையும் குடித்து பரிதாபமாக உயிரிழந்ததார். இதனால் மருந்தக உரிமையாளரைக் கைது செய்து சிறையிலடைத்தது மாவட்ட காவல்துறை.
கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் நீங்கலாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடக்கக் காலகட்டத்தில் பதுக்கி வைத்திருந்த மதுபானங்கள் ஐந்து, ஆறு மடங்கு கூடுதல் விலையில் விற்கப்பட்டன. மது கிடைத்தால் போதும் என்றளவில் விலையைக் கண்டுகொள்ளவில்லை குடிமகன்கள். நாளடைவில் இதற்கும் தட்டுப்பாடு ஏற்படவே, மருந்தகத்தில் தூக்கத்திற்காக வழங்கப்படும் ALPARZOLAM வகையிலான மாத்திரையும், இருமலுக்குப் பரிந்துரைக்கப்படும் CODEINENE வகையிலான மருந்தும் குடிமகன்களின் போதையைச் சற்றே தணித்தன. மருத்துவர் ஆலோசனையின் பெயரில் விற்கப்பட்டும் இம்மருந்து, மாத்திரைகளைப் பணம் கிடைக்கிறதே என்பதற்காகக் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றன பல மருந்தகங்கள். இதனை வாங்கி விற்பதற்கென தனியாகக் கூட்டம் செயல்பட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளன.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா திணையத்தூரிலுள்ள ஸ்ரீ அம்மன் மருந்தகத்தில், மதுவுக்கு அடிமையான தொண்டிப் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் எனும் இளைஞர் ALPARZOLAM வகையிலான ANXIT 0.5 மாத்திரையை மருத்துவ ஆலோசனையில்லாமல் வாங்கி போதைக்காக உட்கொண்டு வந்துள்ளார். நாளடைவில் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இது மாவட்ட எஸ்.பி.க்கு ரகசியத் தகவலாகச் செல்ல, தொண்டி காவல் நிலைய எஸ்.ஐ.சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொண்டி எஸ்.ஐ.சரவணன், திருவாடனை அரசு மருத்துவர் மணிமுத்து, மருந்தாளுனர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து புகாருக்குரிய ஸ்ரீ அம்மன் மருந்தகத்தைக் கண்காணித்து வந்த நிலையில், தொண்டியைச் சேர்ந்த பயாஸ் மற்றும் சியாத் ஆகிய இளைஞர்கள் மருத்துவப் பரிந்துரையின்றி மேற்கண்ட தூக்க மாத்திரை அட்டை இரண்டினை ரூ.1,000-த்திற்கும், 100 மிலி பாட்டில் ஒன்று ரூ.150 வீதம் ரூ.8,250-க்கு 55 பாட்டில்கள் வாங்கியதும் தெரியவர கையும் களவுமாகப் பிடித்து விசாரிக்கையில், இங்கிருந்து வாங்கி பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தங்களின் வழக்கமென ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க, மருந்தக உரிமையாளர் மாரி மற்றும் விற்பனைக்காக வாங்கிய இருவரையும் "போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் 1985 இன் படி வழக்குப் பதிவுசெய்து மூவரையும் கைது செய்துள்ளது மாவட்டக் காவல்துறை.
போதைக்கு அடிமையாகி மாத்திரைகளை மருந்துகளை உட்கொண்டு உயிரிழந்த சதாம் உசேனுக்கு கர்ப்பிணி மனைவி இருப்பது குறிப்பிடத்தக்கது.