
இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ள வருண்குமார், தனது அதிரடி செயல்கள் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். குறிப்பாக சட்ட விரோத செயல்களை தடுக்க, புகார்கள், குறைகளை தெரிவிக்க பிரத்யேக அலைபேசி எண்ணையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த எண்ணுக்கு வரும் ரகசிய தகவல்கள் அடிப்படையில், ஆக்சனும் அதிரடியாக இருக்கிறது.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பாம்பனை சேர்ந்த நபர், "எனது 12 வயது மகள் நரம்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு சேலம் மருத்துவமனையில் இருந்து கூரியர் மூலம் மருந்து வந்து சேரும். தற்போது ஊரடங்கால் மருந்து பெறுவது தடைபட்டுள்ளது. எனவே உதவுமாறு தயக்கத்துடனே கேட்டிருக்கிறார்.
இதையடுத்து சேலம் எஸ்.பி தீபா கணிக்கரிடம் பேசிய எஸ்.பி வருண்குமார், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் மருந்து வாங்கி, காவல்துறை வாகனத்திலேயே பாம்பன் வரவழைத்து கொடுத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் மண்டபம் முகாமை சேர்ந்த பெண், மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டுள்ளார். அவருக்கு காவல் துறை வாகனத்தை அனுப்பி, சிகிச்சை முடிந்த பிறகு அதே வாகனத்தில் வீடு திரும்ப ஏற்பாடு செய்திருக்கிறார் எஸ்.பி.!
“காப்பாற்றுபவன் கடவுள் என்றால், காக்கிச் சட்டை போட்டவர்களும் கடவுள்தான்” என்பதற்கு சாட்சியாக இருக்கிறார்கள் வருண்குமாரும், தீபா கணிக்கரும்.!