உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த மே 14 முதல் தொடங்கி இன்றுடன் (25 ஆம் தேதி) முடிவடைகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் விதமாகக் கொடுக்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) விருது, இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இதில் 7 இந்தியப் படங்கள் திரையிடப்பட்டது. மேலும் 'லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்' என்ற பிரிவில் வர்ஷா பொல்லம்மா நடித்த இருவம் திரைப்படமும் திரையிடப்படுகிறது.
இந்த நிலையில் திரையிடத் தேர்வான 7 இந்தியத் திரைப்படங்களில் மலையாளப் படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light) நேற்று திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு அங்கிருந்த ரசிகர்கள் சில நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். அப்போது அதில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை கனி குஸ்ருதி தன்னுடைய கையில் ‘தர்பூசணி’ வடிவத்தில் கைப்பை ஒன்றை வைத்திருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது. அந்த தர்பூசனியின் நிறம் பாலஸ்தீனத்தின் கொடியைப் பிரதிபலிக்கிறது. மேலும் அவர் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் தன்னுடைய ஆதரவு பாலஸ்தீனத்திற்கு தான் என்பதைக் குறியீடாக சொல்லியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, நடித்த 'தி ஷேம்லெஸ்' படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த 7 திரைப்படங்களில் இதுவும் இன்று. இப்படத்திற்காக அனசுயா சென்குப்தா சிறந்த நடிகை என்ற பிரிவில் விருது வென்றுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரிவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அனசுயா சென்குப்தா பெற்றுள்ளார். இதற்கிடையே இந்த விழாவில் புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாணவர்கள் தயாரித்த 'சன்பிளவர்ஸ்' என்ற குறும்படம் லா சினிஃப் என்ற பிரிவில் விருது வென்றுள்ளது.