Skip to main content

      உழவர்கள் 6,000 மானியம் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும்!ராமதாஸ்

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

 

பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் அறிக்கை: ’’மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் உழவர்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6000 நிதி உதவியை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகளால் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், இத்திட்டத்திற்கான அடிப்படை தகுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

 

r

 

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பான்மை சமூகமாக உள்ள விவசாயிகள், பொருளாதார அடிப்படையில் தன்னிறைவு பெறுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. உழவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படாதது, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவது, உரம், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலைகள்   பெருமளவில் உயர்ந்திருப்பது ஆகியவற்றால் வேளாண் தொழிலில் இலாபம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

 

இதனால் உழவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், உழவர்களின் துயரத்தை ஓரளவாவது குறைக்கும் நோக்கத்துடன் தான் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வந்தது. அதையொட்டி தான் சிறுகுறு உழவர்களுக்கு தலா ரூ.6000 நிதி வழங்கப்படும்; ஆண்டுக்கு 3 தவணைகளில் இது வழங்கப்படும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.

 

மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி தமிழகத்தில் 75 லட்சம் விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி முதற்கட்டமாக தமிழக விவசாயிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் ரூ.277 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைக் கொண்டு 13.85 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் தான் மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்பட்டது.  ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கூட தமிழகத்தில் தகுதியுள்ள 75 லட்சம் விவசாயிகளில் 22 லட்சம் உழவர்களின் ஆவணங்கள் மட்டும் தான் சரிபார்க்கப்பட்டு மத்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 53 லட்சம் விவசாயிகளுக்கு, அதாவது தகுதியுடைய உழவர்களில், 70.66 விழுக்காட்டினருக்கு பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கவில்லை.

 

இதற்கான முதன்மைக் காரணம் இந்தத் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறுவதற்கான நிபந்தனைகளை விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியாதது தான். இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 உதவி பெற விண்ணப்பிக்கும் உழவரின் பெயரில் தான் நிலத்தின் பட்டா இருக்க வேண்டும். அத்துடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் விவசாயிகள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு, அவர்களின் நிலங்களுக்கான பட்டா அவர்களின் பெயரில் இல்லை. 

 

தமிழகத்தில் நில ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாதது, ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை அதன் வாரிசுகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டாலும், அதை அவர்கள் பதிவு செய்து தங்கள் பெயரில் பட்டா வாங்கத் தவறியது, நிலங்களை விலைக்கு வாங்கினாலும் அதை பத்திரப்பதிவு செய்வதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதி பட்டா வாங்க மறந்து விடுவது போன்றவை தான் நில ஆவணங்கள் துல்லியமாக இல்லாததற்கு காரணமாகும். இதை சரிசெய்ய கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை முழுமையான பலனைத் தராததால் சிக்கல் நீடிக்கிறது.

 

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்ற பின்னர், சிறு, குறு உழவர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தத் திட்டம் அனைத்து உழவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை 81.18 லட்சமாக உயரும். இவர்களில் 25%க்கும் குறைவானவர்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்பட்டால், அத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும். உழவர்களின் துயரங்களும், தற்கொலைகளும் தொடர்கதையாகி விடும்.

 

எனவே, உழவர்களுக்கு பட்டா மாறுதல் செய்து வழங்க சிறப்பு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். கிராம அளவில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்து, அதில் உரிய ஆவணங்களை அளிக்கும் உழவர்களுக்கு பட்டா மாறுதல் செய்து, பிரதமரின் நிதி உதவித் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சேர்க்க வேண்டும். தகுதியுடைய சிறு குறு விவசாயிகளுக்கு திசம்பர் & மார்ச் காலத்திற்கான ரூ.2,000 நிதியை நிலுவைத் தொகையாக கணக்கிட்டு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.’’

சார்ந்த செய்திகள்