தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளன. இவர்களில் ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதியை நேற்று அறிவித்துள்ளது. அதில் ஜூலை 1 ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் எனவும், வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஜூலை 8- ஆம் தேதி கடைசி நாள் என தனது அறிவிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுகவிற்கு 3 உறுப்பினர்களும், திமுகவிற்கு 3 உறுப்பினர்களும் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிர ஆலோசனை ஈடுப்பட்டுள்ளன. மேலும் திமுகவில் உள்ள பெரும்பாலான மூத்த தலைவர்கள் மக்களவை உறுப்பினர்களாகவும், மாநிலங்களவை உறுப்பினர்களாகவும் உள்ளனர். இதனால் அக்கட்சி புது முகங்களுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுகவிற்கு ஒரு ராஜ்ய சபா எம்பி பதவி வழங்கப்படும் என திமுக கூட்டணி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் காரணமாக திமுக கட்சிக்கு இரு மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே கிடைக்கும். அதே போல் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக உறுதியளித்துள்ளது. இந்நிலையில் அக்கட்சிக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே கிடைக்கும்.
அதிமுகவில் முக்கிய தலைவர்கள் பலரும் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததால், மாநிலங்களவையில் இடம் பெற முயற்சி செய்து வருகின்றன. அந்த பட்டியலில் அதிமுக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு ராஜ்ய சபா எம்பி வழங்க அதிக வாய்ப்புள்ளது. அதே போல் மீதமுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.