ரஜினியின் கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சை காயப்படுத்தி விட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தொழிற்சாலை குடியிருப்புக்கு ஒரு சேதமும் கிடையாது. யார் தீ வைத்தது,? போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்து கொண்டனர். வேன் மீது இருந்து துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். அங்கிருந்த 50 ஆயிரம் மக்கள் வன்முறையில் ஈடுபட்டு இருந்தால் எத்தனை போலீசார் உயிர் இழந்திருப்பார்கள். அற வழியில் போராட்டம் நடத்திய மக்களை போலீசார் சுட்டு வீழ்த்தினால் ஸ்டெர்லைட் ஆலை முன் முற்றுகை போராட்டத்தை நடத்த மாட்டார்கள் என்று ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக அரசு காவல் துறையை ஏவி உள்ளது.
இப்போது தென் மாவட்டங்கள், தூத்துக்குடி ஆகியவை எரிமலை ஆகிவிட்டது. ஆலை நிர்வாகத்தினர் ஆலையை நடத்த உத்தரவை பெறுவோம் என்று கூறுகின்றனர். என்ன தைரியத்தில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆலையை இயக்கலாம் என்று அனுமதி வந்தால் கூட ஆலையை நடத்த முடியாது. தமிழக மக்கள் அறவழியில் தான் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் சமூக விரோதிகள் அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நினைத்தால் நாங்கள் லட்சம் பேரை அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம். அதனை தடுத்து நிறுத்தினால் எரிமலை வெடிக்கும்.
ரஜினிகாந்த் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரிச்சுவடி கூட அவருக்கு தெரியாது. போராட்டம் பற்றி அரிச்சுவடியும் அவருக்கு தெரியாது. தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்று நண்பர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடக்கூடாது என்பதற்காக நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
தமிழகத்தின் உரிமையை காப்பாற்றவும் சுடுகாடாகவும், பாலைவனமாகாமலும் இருக்க போராட்டம் நடத்தி இருக்கிறோம். ரஜினிகாந்த் சில அறிவுரைகளைசொல்லி இருக்கிறார். அவர் கூறிய வார்த்தைக்கு பதில் கூற விரும்பவில்லை. மக்கள் கவனித்து கொண்டுதான் உள்ளார்கள். அவரது கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சை காயப்படுத்தி விட்டது என்பதை என்றைக்காவது ஒருநாள் அவர் உணர்வார். இவ்வாறு அவர் கூறினார்.