ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உலகமெங்கும் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் விதவிதமான முறையில் கொண்டாடி வரவேற்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், சோளிங்கர் சுமதி திரையரங்கில் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என். இரவி தலைமையில், கேரளா செண்டை மேள தாளத்துடன் பால் குடம் ஏந்தி வந்து பாலாபிஷேகம் செய்து உற்சாக நடனங்களுடன் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இது குறித்து மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என் இரவியிடம் பேசியபோது, “தலைவர் படம் திரைக்கு வருகிறது என்றாலே, அது எங்களுக்கு திருவிழா தான். 73 வயது கடந்தும் தன்னுடைய அசாத்திய உழைப்பால் மக்களை மகிழ்விப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆதாயத்திற்காக தேவையற்ற விவாதங்களைத் திட்டமிட்டு கிளப்பி வருகிறார்கள். எங்கள் தலைவர் எப்போதும், யாரையும் புண்படுத்த மாட்டார். காரணம் யாரையும் தனக்குப் போட்டியாகக் கருதாமல் தனக்குத் தானே போட்டி என்று கருதுபவர். இன்னும் சிம்பிளா சொல்லனும்னா சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சார் சொன்னது போல எங்கள் தலைவர் ரெகார்ட் மேக்கர்., ரெகார்ட் பிரேக்கர் கிடையாது. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஜெயிலர் திருவிழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, சோளிங்கர், ஜோலார்பட்டை, ஆற்காடு வேலூர், திருப்பத்தூர், குடியாத்தம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படம் நிச்சயம் தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் ஒரு நல்ல சாதனைப் படமாக அமையும்” என்றார்.
இளம் நடிகர்களின் ரசிகர்களுக்கு போட்டியாக ரஜினி ரசிகர்கள் திரைப்பட வெளியிட்டூக்கு கட் அவுட், பேனர், கொடி, தோரணம், ஊர்வலம், மண் சோறு, பாலாபிஷேகம், ஆராதனை என அலப்பறை செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.