தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டப் பிறகு, காயம்பட்டவர்களைக் காணச்சென்ற நடிகர் ரஜினிகாந்த் ''போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு, சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதே காரணம்'' எனச் செய்தியாளர்களைச் சந்திக்கையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன், விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் சேகர் ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்திக்கையில், அடுத்த மாதத்திற்குள் ரஜினிகாந்தை விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. மீண்டும் சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.