வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் களத்தில் பணம் தண்ணீராக செலவழிக் கப்படுகிறது. அதிலும் திமுகவை விட அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், அதிமுகவினர், பாமகவினர், தேமுதிகவினர், பாஜகவினருக்காக தேவைக்கு அதிகமாக செலவு செய்கிறார்கள் என்கிற குரல்கள் தேர்தல் களத்தில் பேசப்பட்டன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே கட்சி நிர்வாகிகளுக்கு தனியே செலவு, பூத் செலவுக்கு தனியே தினமும் ஒரு தொகை என வாரி வழங்கி வந்தார் ஏ.சி.சண்முகம். அதோடு பிரச்சாரத்துக்கான செலவு தனி.
கடந்த 23ந்தேதி தேர்தல் பிரச்சாரத்துக்காக அதிமுக தலைமை கழகம் அறிவித்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 209 பொறுப்பாளர்கள் தலைமையில் அதிமுகவினர் வேலூர் வந்து இறங்கிய சில நாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக புலம்புகிறார்கள் நிர்வாகிகள்.
இதுப்பற்றி பேசும் அதிமுகவினர், வெளியூர் கட்சியினர் வருவதற்கு முன்பு கட்சிக்காரர்களின் செலவுக்கு தினமும் 10 ஆயிரம் என தந்தார்கள். அமைச்சர்கள் உட்பட தேர்தல் பொறுப்பாளர்கள் வந்தபின், அதுவும் குறிப்பாக முதல்வர் எடப்பாடி வந்து சென்றபின் எதுவுமே தரவில்லை. கேட்டால், பணம் வரவேண்டிய இடத்தில் இருந்து வரவில்லை எனச்சொல்கிறார்கள்.
ஒரு தொகுதிக்கு 5 அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தாலும் அவருக்காக நாம எதுக்கு செலவு செய்யனும்னு ஒருவரும் தங்களது பாக்கெட்டில் இருந்து எடுத்து செலவு செய்யவில்லை. தங்களது செலவை மட்டுமே பார்த்துக்கொள்கிறார்கள். ஏ.சி.எஸ் தரப்பில் இருந்து பணம் வந்தால் மட்டுமே செலவு செய்கிறார்கள். அவுங்களே செலவு செய்யல, நாங்க மட்டும் எதுக்கு செலவு செய்யனும்னு அடுத்த கட்ட நிர்வாகிகளும் செலவிடவில்லை என புலம்புகிறார்கள்.
திடீரென ஏ.சி.எஸ் தரப்பு, கீழ்மட்ட நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்களுக்கு தினசரி செலவுக்கு கூட தந்தப்பணத்தை நிறுத்தியது ஏன் எனத்தெரியாமல் உள்ளனர்.