கடந்த 30 ஆண்டுகாலமாக எப்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பு தமிழகத்தில் இருந்துவந்தது. ஆனால், ரஜினியிடம் இருந்து உறுதியான எந்த அறிவிப்பும் வராததால் மக்கள் ஏமாந்து போயினர், ரசிகர்களும் சோர்வடைந்தனர்.
2017ல் நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்திருந்தார். கடந்த மாதம் ரஜினி பெயரில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியான அறிக்கையில், உடல் நலப் பிரச்சனையால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதுகுறித்து ரஜினி அறிக்கை வெளியிடும்போது, 'தகவல் உண்மை. ஆனால், நான் வெளியிடவில்லை' என்றார்.
இந்நிலையில், நவம்பர் 30 -ஆம் தேதி, ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை அழைத்து, அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விவாதித்தார். இன்று (03.12.2020), தனது ட்விட்டர் பக்கத்தில், "டிசம்பர் 31 -ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பும், ஜனவரி மாதம் கட்சி தொடங்கவுள்ளதாகவும்" அறிவித்தார். அதனையே செய்தியாளர்களைச் சந்தித்தும் கூறினார். ரஜினியின் இந்த அறிவிப்பு வெளிவந்ததும், ரஜினி மக்கள் மன்றத்தினர், தங்களது மாவட்டங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிவருகின்றனர்.
வேலூர், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில், ரஜினியின் அறிவிப்பை தொடர்ந்து சோளிங்கர் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரஜினி, கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியினை மீண்டும் தொடங்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.
ஜனவரி மாதம் கட்சி தொடங்குகிறேன் என ரஜினி செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்திருப்பது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைக் கொண்டாட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.