திருச்சி மாவட்டம் கே.கே. நகர் ஈ.வே.ரா பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (61). இவருக்குச் சொந்தமாக புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் 80 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிந்த வந்த நத்தம் விஸ்வநாதன், வாங்கத் திட்டமிட்டு லோகநாதனிடம் விலை பேசி உள்ளார். இதற்காக ரூ.4.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு முன்பணமாக ரூ.25 லட்சம் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முதல் தவணையாக ரூ.18 லட்சம் ரொக்கமாகவும், ரூ.5 லட்சத்துக்கு செக்கையும் லோகநாதனிடம் வழங்கி உள்ளார். இதையடுத்து, லோகநாதன் ரூ.5 லட்சத்துக்கான செக்கை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை எனத் திரும்பியுள்ளது. அதுமட்டுமன்றி, லோகநாதனுக்கு சொந்தமான நிலத்துக்குரிய மீதித் தொகையை வழங்காமல் அவரிடம் நிலத்தை எழுதி கொடுக்கும்படி நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் தரப்பில் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் இது குறித்து லோகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, லோகநாதன் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்தார். பண மோசடி, மிரட்டல் உள்ளிட்டவற்றுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கருதிய அப்போதைய குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முரளிதர கண்ணன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர் காமராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கே.கே. நகர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், நிலுவை வழக்குகளை நடவடிக்கை எடுக்க விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொடர்பான வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான மாஜிஸ்திரேட்டு கோர்ட் எண்.1க்கு மாற்றி 2ஆம் எண் மாஜிஸ்திரேட் பாலாஜி நேற்று (11-01-24) உத்தரவிட்டுள்ளார்.