கஜா புயல் நிவாரணம் யானைப் பசிக்கு சோளப்பொறி போன்று சொற்ப அளவே நிவாரணத்தை அரசு வழங்கி வருகிறது, அப்படி வழங்கப்படும் நிவாரணமும் ஒருதலைப்பட்சமாகவும் ஒரு சாராருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது அனைவருக்கும் வழங்கப்படவில்லை என திருவாரூரில் இந்திய கம்யூ கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சி சார்பில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கஜா புயலால் பாதித்த மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்கிட வேண்டும். நெற் பயிர்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ25 ஆயிரம் உள்ளிட்ட விவசாய பாதிப்புகளை உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் .
மேலும் விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும், மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்திட வேண்டும், கஜா புயல் பாதிக்கப்பட்டு நிவாரணம் கேட்டு போராடும் மக்கள் மீது அச்சுறுத்தும் வகையில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம்
முத்தரசன் கூறுகையில்,
"புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் புயலுக்கு ரூ 15,000 கோடி நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு மத்திய அரசிடம் வைத்தது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழக அரசு நிவாரணம் அறிவித்து அதனை வழங்கி வருகிறது.
ஆனால் அந்த நிவாரணம் யானைப் பசிக்கு சோளப்பொறி போன்று சொற்ப அளவே நிவாரணத்தை அரசு வழங்கி வருகிறது, அப்படி வழங்கப்படும் நிவாரணமும் ஒருதலைப்பட்சமாகவும் ஒரு சாராருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து பல கட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் புயல் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே அரசு பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற விட்டால் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும்," என கூறினார்.