சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு ராஜினாமா கடிதம் கொடுக்க ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் பலர் கூடினர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி ரசிகர்களை சந்தித்து பின் மாவட்டங்கள் வாரியாக மன்ற நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் அரசியல் கட்சி அறிவிப்பிற்காக அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், நேற்று மாலை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ரஜினியை சந்திக்க ராமநாதபுர ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் வந்தனர். அப்போது ரஜினிகாந்த் வீட்டில் இல்லை என காவலாளி சொல்ல லதா ரஜினிகாந்தையாவது சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கூறிய நிலையில் லதா ரஜினிகாந்தும் வீட்டில் இல்லை என காவலாளிகள் கூறியள்ளனர்.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராமச்சந்திரன் மாநில நிர்வாகிகளான சுதாகர் மற்றும் இளவரசன் ஆகியோர் பண பலம் உள்ளவர்களை பார்த்து அவர்களுக்கே பொறுப்புகளை வழங்குகிறார்கள். ரஜினிகாந்த்தையே பெரிதாக கருதாத சிலரை மாநில நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்காக நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம் ஆனால் இந்த மாநில நிர்வாகிகளான சுதாகர் மற்றும் இளவரசன் தலைமையின் கீழ் செயல்பட விருப்பம் இல்லை என கூறினார். பின்னர் வீட்டில் யாரும் இல்லை என தெரிந்து திரும்பி சென்றனர்.