அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் தேவை என 3 திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள், அதன் மூலம் நாட்டில் புரட்சி ஏற்படட்டும், அதன்பின் நான் அரசியலுக்கு வருகிறேன், நான் முதலமைச்சர் ஆக மாட்டேன், தேர்தல் முடிந்ததும் தேவையற்ற கட்சி பதவிகளை கலைத்துவிடுவேன் என நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவித்தார். இளைஞர்களுக்குத் தேர்தலில் அதிக வாய்ப்பளிப்பேன் எனச் சொன்னதை ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் மக்களிடம் கொண்டும் போய் சேர்க்கும் வேளையில் ஈடுபட்டுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி, மார்ச் 18- ஆம் தேதி சோளிங்கர் நகரில் கட்சியினருடன் நகரில் உள்ள கடைக்காரர்கள், வியாபாரிகள், பேருந்து நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் என பலரிடம் ரஜினியின் 3 திட்டங்கள் அடங்கிய நோட்டீஸை தந்து, நாடு முன்னேற அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து டீ கடை, பேன்ஸி ஸ்டோர், பழக்கடைகளில் ரஜினி சொன்ன அரசியல் மாற்றம் தேவை, ஆட்சி மாற்றம் தேவை, ரஜினிக்கே எங்கள் ஆதரவு என்பதை பிளாஸ்டிக் அட்டையில் அச்சடித்து வழங்கினர். அதனை வியாபாரிகளும் வாங்கி தங்களது கடைகளில் வைத்துள்ளனர். மேலும் அந்த தட்டிகளை தங்களது கடையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கச் சொல்ல வியாபாரிகளும் வைத்துள்ளனர்.

இதேபோல் கிராமங்களுக்கும் சென்று ரஜினியின் அரசியல் திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ்களை தந்து அரசியல் புரட்சிக்கு மக்களை தயார்படுத்தும் பணியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.