Skip to main content

ரஜினியை கைது செய்ய வலியுறுத்தி உருவபொம்மை எரிப்பு- தேனியில் பரபரப்பு!!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை தேனியில் எரித்து போராட்டத்தில் குதித்தனர் ஆதித் தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள்.

சென்னையில் சமீபத்தில் நடந்த துக்ளக் பத்திரிக்கையின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது தந்தை பெரியார் குறித்து தெரிவித்த கருத்து  சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தேனி பூதிப்புரம் சாலையில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு ரஜினிகாந்தை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தப் போவதாக தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சேர்ந்தவர்கள் அறிவித்தனர்.

 

rajini controversy speech about peyiyar... incident in theni

 

இதனால் அந்த தியேட்டர் முன்பு போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தது. அப்பொழுது போராட்டம் நடத்துவதற்கு வந்த நிர்வாகிகளை சாலையில் கூடுவதற்கு முன்பாகவே போலீசார் பிடித்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த நிலையில் திடீரென  ஆட்டோவில் வந்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் நடிகர் ரஜினிகாந்த்தின்  உருவ பொம்மையை சாலையில் வீசி தீ வைத்து எரித்தனர்.

உடனே போலீசார் பதறியடித்துக் கொண்டு ஓடி சென்று அந்த ரஜினியின் உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் உருவ பொம்மையும் எரிந்தது. அப்பொழுது ஆதித்தமிழர் பேரவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் "தந்தை பெரியாரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என கோஷம் போட்டனர்"

 

rajini controversy speech about peyiyar... incident in theni

 

இந்த போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவா, மேற்கு மாவட்ட செயலாளர் நீலகனலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவரணி மாவட்ட செயலாளர் அருந்தமிழன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள்  அனைவரையும் அதேபகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அனைவரையும்  அங்கிருந்து வேறு திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டு மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இருந்தாலும் இப்படி திடீரென ரஜினியின் உருவ பொம்மையை எரித்தது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்