கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று (09.08.2021) வெளியிடப்பட இருக்கிறது. காலை 11.30 மணிக்கு 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் பேசியதாவது, "தமிழக அரசு முந்தைய அதிமுக அரசு நிதிநிலையை சீர்கேடு செய்ததுபோல ஒரு தவறான தகவலைப் பரப்பிவருகிறது. அதிமுக ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னதை இதுவரை செய்யவில்லை. 100 நாட்களில் மக்களின் குறைகளைத் தீர்ப்போம் என்று கூறிய அவர்கள், இதுவரை செய்தது என்ன? நீட் தேர்வை நீக்க அவர்கள் என்ன முயற்சி எடுத்துள்ளார்கள்" என்றார்.
மேலும், ராஜேந்திர பாலாஜி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "ராஜேந்திர பாலாஜி சொந்த அலுவல் காரணமாக டெல்லி சென்றுள்ளார். நான் அவரிடம் பேசினேன். அவர் பாஜகவில் இணைய மாட்டார்" என்றார்.