Skip to main content

பள்ளிவாசல் ஜமாத் சமுதாயக்கூடம் கட்ட ராஜேந்திர பாலாஜி ரூ.10 லட்சம் நிதியுதவி!

Published on 14/10/2024 | Edited on 14/10/2024
Rajendra Balaji Rs. 10 lakh financial assistance to build Pallivasal Jamath community hall

தமிழ்நாடு இன்னும்  ஒன்றரை ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. அதற்கு, அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.  ஒருபக்கம் ஆளும்கட்சியான திமுக அரசுத் திட்டங்களை முனைப்புடன்  செயல்படுத்தி களத்தில் மக்களிடம் நெருக்கத்தில் இருக்கிறது.  அரசு  நிகழ்ச்சிகளின் வாயிலாக திமுக அமைச்சர்களும் தொகுதிகளை வலம் வந்தபடியே உள்ளனர்.

இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக,  வரவிருக்கும் 53-வது ஆண்டு  தொடக்கவிழா ஏற்பாடுகளில் பிசியாக இருக்கிறது. கடந்த செப்டம்பரில்,  தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தொகுதிகளில், அண்ணா பிறந்தநாள்  விழா பொதுக்கூட்டம் நடத்தியது. கடந்த அக்டோபர் முதல் வாரத்தில், உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும் அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்,  நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மனிதச் சங்கிலிப் போராட்டம்  நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் செயல் வீரர்கள்,  வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சி செயல்பாட்டின் மூலம் அதிமுக தொண்டர்களை  உத்வேகப்படுத்துவதிலும், விருதுநகர் மேற்கு மாவட்ட கட்சிக்கு  உட்பட்ட அனைத்து சமுதாய  மக்களின் ஆதரவைத் திரட்டுவதிலும், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பெரிதும் ஈடுபாடு காட்டிவருகிறார்.

Rajendra Balaji Rs. 10 lakh financial assistance to build Pallivasal Jamath community hall

விருதுநகர் ஒன்றியம் – சிவஞானபுரம் விலக்கில் கிரிக்கெட் போட்டி விழா  நடத்தி சிறப்புப் பரிசாக ரூ.25,000 வழங்கியிருக்கிறார். முதல் பரிசுக்கு  ரூ.10,000மும் இரண்டாம் பரிசுக்கு ரூ.7,500ம் அக்கட்சியினர் தந்துள்ளனர்.  இந்நிலையில், சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாத்திற்குப் பாத்தியப்பட்ட  தர்ஹாவின் புதிய சமுதாயக்கூட கட்டிடப் பணிக்கு  ராஜேந்திர பாலாஜி ரூ.10 லட்சம் நிதியுதவி  அளித்திருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்   “இஸ்லாமியர்களுக்கு என்றென்றும் உற்ற தோழனாகவும், உங்களில்  ஒருவனாகவும், இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாகவும் இருப்பேன்” என்றார்.   முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2026 தேர்தல் களம் விறுவிறுப்பாக  இருக்கும்போல் தெரிகிறது.  

சார்ந்த செய்திகள்