திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிர்க்கட்சியான அதிமுக இன்று (17.12.2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தவும், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் திமுக அரசுக்கு வலுயுறுத்தப்பட்டது. சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில் தென்சென்னை, வடக்கு, கிழக்கு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், விருதுநகரில் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் இன்று அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், அதற்காக ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று அந்த முன்ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், அவரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த செய்தியை அறிந்த ராஜேந்திர பாலாஜி உடனே, ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பிவிட்டார்.
இதுகுறித்து அங்கிருந்த ர.ர.க்கள், “முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதால், ராஜேந்திர பாலாஜி கைது நடவடிக்கை இருக்குமோ என்று எண்ணி சட்டென்று கிளம்பிவிட்டார்” என்றதோடு கைது நடவடிக்கைக்கு அஞ்சி அவர் தலைமறைவும் ஆகியிருக்கக்கூடும் என்றும் பேசிக்கொண்டனர்.
இதற்கிடையில், ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.