Skip to main content

ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு; இறுதி விசாரணை தேதியை அறிவித்த நீதிமன்றம்..! 

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

Rajendra Balaji embezzlement case; Court announces final hearing date ..!

 

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் மூன்றாவது நீதிபதி முன்பாக ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறவுள்ளது.

 

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். 

 

அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதே போல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும்,4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார் என்றும், இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக  லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும்,  விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும், இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும், அதனால்  விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும் கூறி, வழக்கை முடிக்கவும் பொது துறை உத்தரவிட்டதாதாக கூறப்பட்டு இருந்தது. 

 

அரசு தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர்  கூறுகையில்,  ஆரம்ப கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை, அரசு   அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது  வருமானம்  உள்ளது என கூறினார் . இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தீர்ப்பளித்த  நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட  தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். 

 

பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார். 

 

இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது  நீதிபதியாக  எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். 

 

அவர் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.    இதையடுத்து வழக்கின் மீதான இறுதி வாதங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி நேரடி விசாரணையாக கேட்பதாக கூறி வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்