



தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மாநிலத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை, வளிமண்டல சூழற்சியால் ஏற்பட்ட கன மழை, பெரும் சேதத்திற்கு உள்ளாக்கியது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்கள் இந்த கன மழையால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இரு மாவட்டங்களிலும், மீட்பு பணிகள் துரிதபடுத்தப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேற்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளான தூத்துக்குடி மாவட்ட மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின்படி, கடந்த 5 நாட்களாக தினமும் செட்டியார்பட்டி ராமதவசி மண்டபத்தில் உணவைத் தயார் செய்து, ராஜபாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பிவருகிறார் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான தங்கப்பாண்டியன். இதற்கு தூத்துக்குடி மக்கள் தஙக்ள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். திமுக நகரச் செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் கழகச் செயலாளர் இளங்கோவன் மற்றும் திமுக நிர்வாகிகள், தூத்துக்குடி மக்களுக்கு உணவு அனுப்புவதில் உறுதுணையாக இருந்துள்ளனர்.