வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுக்க பலத்த மழை பெய்துவருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான நீர் நிலைகளும் நிறைந்துள்ளன. அதீத மழைப் பொழிவால், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி இரவு சென்னையில் பெய்த பெருமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது. அதன்பிற்கு தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மின் மோட்டார் உதவியுடன் தேங்கிய மழை நீரை அகற்றிவருகின்றனர்.
அந்த வகையில், சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கம் முழுவதுமாக மழை நீரில் மூழ்கியிருந்தது. மேலும், பக்கத்து தெருவான சுப்ரமணிய நகர் தெருக்களிலும் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மோட்டார் மூலம் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.