தென்காசியை அடுத்த இலஞ்சி பகுதியின் கொட்டாகுளம் ஏரியாவைச் சேர்ந்த வினித், அதே பகுதியில் வசித்து வந்த குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட கிருத்திகா பட்டேலை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தை பெண் வீட்டார் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 25ம் தேதி கிருத்திகாவை அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீடு புகுந்து கடத்திச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது தென்காசி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. இதில் தொடர்புடைய 13 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிருத்திகாவின் பெற்றோர் உள்பட 8 பேர் தலைமறைவாக உள்ளனர். இதனிடையே தன்னுடைய மனைவியை மீட்டுக் கொடுக்கும்படி வினித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது கிருத்திகாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனையடுத்து கிருத்திகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கிருத்திகா மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம். கிருத்திகா யாருடன் செல்ல வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். அத்தோடு கிருத்திகாவின் வழக்கை பொருத்தமட்டில் பலதரப்பில் இருந்தும் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டதால், அவர் யாருடன் செல்கிறாரோ அவர்களே பெண்ணின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பு.
மேலும் அவரை முறையாக விசாரணைக்கு ஆஜர்படுத்தவேண்டும் என நீதிபதிகள் கூறினர். அதனையடுத்து கிருத்திகா கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஷுடன் செல்வதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்ததையடுத்து கிருத்திகா கேரளாவில் உள்ள உறவினருடன் செல்ல அனுமதி வழங்கியதோடு, வினீத் மாரியப்பன் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.