நேற்று இரவு முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில் கன மழையினால் பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்திற்குப் பிறகு சென்னையில் மீண்டும் மழை துவங்கியுள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தாம்பரம், கோடம்பாக்கம், கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தற்போது மீண்டும் மழை பொழிய ஆரம்பித்தது. சென்னை உட்படத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறையில் மிதமான மழை பெய்யலாம். அதேபோல் தஞ்சை. திருவாரூர். ராமநாதபுரம். புதுக்கோட்டை. சிவகங்கை. திருச்சி. சேலத்தில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாமக்கல், கோவை மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிள்ளியாற்றின் கரையோரம் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியிலிருந்து இன்று இரவு அல்லது நாளை உபரி நீர் திறக்கப்படும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் எந்த நேரத்திலும் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.