தமிழகம் முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதில் தமிழகத்தின் தலைநகரான சென்னை முன்னிலையில் உள்ளது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகரில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் காலியாகி வருகிறது.
லாரிகளில் கொண்டு வந்து விற்கப்படும் தண்ணீரின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு கேன் வாட்டர்களின் விலையும் கணிசமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரிச்செய்ய தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் விரக்திக்கு ஆளாகியுள்ளனர்.
இதனை தாமதமாக உணர்ந்த அரசு சென்னையின் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்ப்பேட்டையில் இருந்து வேலூர் வழியாக வில்லிவாக்கம் வரை தினமும் ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2001ம் ஆண்டு இதேபோல கடும் குடிநீர் பஞ்சம் சென்னை மாநகரில் ஏற்பட்டபோது, நெய்வேலியில் இருந்து ரயில்களில் சென்னைக்கு குடிநீர் கொண்டுவந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாம். இந்தாண்டும் தாகத்தால் சென்னை தவித்து வரும் சூழலில் தினமும் இரயிலில் 50 டேங்கர் மூலமாக 25 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு சென்று வழங்க அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அப்படி கொண்டு சென்றால் அந்த அளவு நீர் சென்னை மாநகராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவில் 5 சதவீதம் மட்டுமே. தவிர, இத்திட்டத்திற்கு 154 கோடி ரூபாய் செலவாகும் என்று தமிழக அரசு கணக்கிட்டுள்ளது.