திருவண்ணாமலை நாடாளமன்ற உறுப்பினரான சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலை ரயில்வே நிலையத்துக்கு ஆய்வுக்கு வந்த கோட்ட பொறியாளர் மற்றும் அதிகாரிகளை வரவேற்றார். அவர்களோடு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். பயணிகள் மழை, வெயில் காலங்களில் பாதுகாப்பாக நிற்க மேற்கூரை அமைப்பது, பயணிகள் தங்க கூடுதல் கட்டிடங்கள் கட்டுவது, முக்கிய பிரமுகர்கள் தங்க கட்டிடம் ஏற்படுத்துவது என செய்ய வேண்டும் என வேண்டுக்கோள் வைத்தார்.
அதோடு, இப்பகுதி மக்கள், வியாபாரிகளின் நீண்ட கால கோரிக்கையான அதிவேக ரயில்கள் திருவண்ணாமலையில் நின்று செல்ல வேண்டும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இரயில்கள் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை அதிகாரிகளிடம் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியவர், தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரும் ரயிலை திருவண்ணாமலைக்கும், சென்னை பீச் முதல் வேலூர் கண்டோன்மெண்ட் வரை ரயிலை திருவண்ணாமலை வரை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன், திருவண்ணாமலை வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும், ரயில் நிலையத்தில் கூடுதலான கழிவறைகளை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன் என்றார்.
திருவண்ணாமலை - திண்டிவனம் இரயில்பாதை திட்டம் ரத்து எனச்சொல்லப்படுகிறதே என கேள்வி எழுப்பியபோது, பாமகவை சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணிராமதாஸ், பொய்யான தகவல்களை அறிக்கையாக தந்துள்ளார். அப்படியொரு எண்ணம்மே இரயில்வே வாரியத்துக்குயில்லை. அப்படியொரு கடிதம் வரவில்லை. அவர் பொய்யான தகவலை அறிக்கையாக தர அதை பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. அந்த திட்டம் தொய்வாக இருப்பது உண்மை தான். அதற்கு காரணம் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யாதது தான். ரயில் பாதை அமைப்பதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்த ஆண்டு இந்த திட்டத்துக்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வைப்பேன் என்றார்.
அதேபோல் திருவண்ணாமலை - திண்டிவனம் இரயில் பாதை திட்டம் என்பது சரியானது தான், ஆனால் இது முழுமையான திட்டமல்ல. திருவண்ணாமலையில் இருந்து ஜோலார்பேட்டை வரையிலான பாதை திட்டம் நடைமுறைக்கு வந்தால் தான் அது முழுமை பெறும் என்றார்.
கடந்த மாதம் திண்டிவனம் - திருவண்ணாமலை, பழனி - ஈரோடு, சென்னை - கடலூர் போன்ற 5 ரயில்வே திட்டங்களை ரத்து செய்யச்சொல்லி ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. இந்த திட்டங்களால் மக்கள் பயன்பெறுவார்கள், இந்த பகுதி வளர்ச்சி பெறும் அதனால் ரத்து செய்யக்கூடாது என பாமக அன்புமணிராமதாஸ் அறிக்கை விடுத்துயிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அது பொய்யான அறிக்கை என திமுக எம்.பி சாடியுள்ளார்.