ரயில்வே நிர்வாகம் போக்குவரத்திற்காக அமைத்த சப்வேயில், ஐந்து அடி ஆழம் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் புகாரளித்தும் கண்டுகொள்ளாததால் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் பாதாள சப் வே-க்களை ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது. தற்பொழுது பெய்து வரும் மழையினால் பெரும்பாலான பாதாள சப்- வேக்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்தப் பாதையைக் கடந்து செல்லக் கூடிய பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும், ஏனோ ரயில்வே நிர்வாகம் இதனைக் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே உள்ள தென்குடா பகுதியில் உள்ள பாதாள சப்வேயில் ஐந்து அடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கி அவஸ்தைக்குள்ளாக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ தேங்கிய மழை நீரை அகற்ற கோரியும், ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும் பாதாள பாதையில் தேங்கிய நீரில் துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உள்ளூர் போலீசாரின் வாக்குறுதியில் கலைந்து சென்றனர்.