சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 14- ல் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். மைசூர்-மயிலாடுதுறை ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். செங்கோட்டை- தாம்பரம் ரயில் , சாரதா சேது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால்-எழும்பூர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி வருகிற பிப்.14ம் தேதி சிதம்பரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அரங்க தமிழ் ஒளி தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ அப்துல்நாசர், நகர் மன்ற துணைத் தலைவர் எம் முத்துக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் சேரலாதன், நகர செயலாளர் குமார், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பூ.சி. இளங்கோவன், இந்திய கம்யூ கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வி.எம்.சேகர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர்.மக்கின், செயல் தலைவர் தில்லை கோ.குமார், மாவட்ட துணைத்தலைவர் ராஜா சம்பத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் பால அறவாழி, கோ.நீதிவளவன், ரயில் பயணிகள் நலச் சங்க தலைவர் அப்துல் ரியாஸ், நிர்வாகி வழக்கறிஞர் ஸ்ரீதர், நிர்வாக செயலாளர் ஜெ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திட்டமிட்டபடி பிப்ரவரி 14 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவது, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்ல மறுப்பது, சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இருதய சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட மருத்துவர்களை நியமிக்க வேண்டும், இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர் மருத்துவ சிகிச்சைகளை செயல்படுத்த வேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.