கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராய சம்பவத்தில் 67 பேர் உயிர் இழந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தின் பிறப்பிடம் எனக் கூறப்படும் கல்வராயன் மலையில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐ.ஜி அஸ்ராகார்க் கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி ஆகியோர் 200 க்கும் மேற்பட்ட போலீசாருடன் கல்வராயன் மலையில் அதிரடியாக கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது ஏற்கனவே கள்ளச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப் பொருட்கள் அவர்களுடைய வீட்டில் இருக்கிறதா என்ற சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அடர்ந்த வனப்பகுதி உள்ள இடங்களில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு சோதனைகளை செய்துள்ளனர். கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும்பணி ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளின் இன்றைய சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு கல்வராயன் மலையில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் தொடர்ந்து விடக்கூடாது எனக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சின்னசேலம் பகுதி வழியாக கல்வராயன் மலை கரியாலூர் வெள்ளிமலை போன்ற பகுதிகளுக்கு சென்ற இவர்கள் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சேராப்பட்டு என்ற மலைப் பகுதிக்கு சென்று அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னர். சோதனை முடிந்த பிறகு மலையிலிருந்து கீழே இறங்கி சங்கராபுரம் வட்டம் வழியாக வெளியேறிச் சென்றுள்ளனர்.