வருமான வரி சோதனை என்பது சமீப காலமாக மேற்கு மண்டல தொழில் நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரோட்டில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற பெயரில் பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ‘சோளி’ என்ற பெயரில் மசாலா கம்பெனியும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாகப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வருமான வரித்துறைக்குப் புகார் சென்றது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் 14ஆம் தேதி இரவு முதல் தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 25 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஈரோடு காளைமாடு சிலை அருகில் தங்கபெருமாள் வீதியில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.
அப்போது அலுவலகத்தின் கதவை அடைத்துவிட்டு உள்ளே சென்ற அதிகாரிகள் அங்குள்ள பணியாளர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அவர்களிடம் இருந்த செல்ஃபோன்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். அங்குள்ள தொலைபேசியை பயன்படுத்தத் தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை வாங்கி சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடத் தொடங்கினார்கள்.
இதேபோல் ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து வீடு முழுவதும் சல்லடை போட்டு சோதனை செய்தனர். வருமானத்துக்கு ஏற்ப உரிய வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் சோதனையைத் தீவிரப்படுத்தினார்கள்.
இந்த சோதனை நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்தது. முதல் நாள் சோதனையில் கணக்கில் வராத பணம், சில ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
நேற்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நீடித்தது. காளைமாடு சிலை அருகே உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம் வெளிப்புறமாகப் பூட்டப்பட்டது. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வருமானவரித் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.16 கோடி பணம் சிக்கியுள்ளது. இதுபோல் கணக்கில் வராத பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கஸ்பாபேட்டை பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாகச் சோதனை செய்தனர்.
ஈரோடு, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அரசின் திட்டப் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்யும் இந்த நிறுவனம் கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு நெருக்கமானது. இதன் உரிமையாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவினர் என்பதால் யாருக்குக் குறி என்று அ.தி.மு.க.வட்டாரத்தில் பீதி ஏற்பட்டுள்ளது.