ராஜபாளையம் தொகுதியில் ‘ஓட்டுக்கு பணம்’ என்பதை, ராஜேந்திரபாலாஜியை முந்திக்கொண்டு திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன், ரூ.500-க்கான டோக்கன்களாக வீடு வீடாக, வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விநியோகித்து வரும் நிலையில், ராஜேந்திரபாலாஜி தரப்பிலும் ரூ.500 வீதம் கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் நண்பரும், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான சீனிவாசன் வீட்டில், திடீரென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 10-க்கும் மேற்பட்ட மதுரை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய சோதனையின் முடிவில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், சோதனை நிறைவுற்றது எனவும் கூறினார்கள்.
சீனிவாசனும், “திடீரென அதிகாரிகள் வந்தார்கள். வீட்டை சோதனையிட வேண்டுமென்றார்கள். சம்மதித்தேன். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். சோதனைக்குப் பிறகு, ஆவணங்கள் எதுவும் இல்லையென்று கிளம்பிவிட்டார்கள்” என்றார்.
‘என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது’ எனச் சொல்லும் வகையில், தமிழகத்தில் பரவலான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.